Thursday, July 24, 2014

சண்முகம் எதிராஜ் கடிதம்

அன்புள்ள ஜெ,
ஏழாம் உலகம் நான் கடவுள் படத்தின் மூலமாக இருக்கிறது என்று சொன்னதில் இருந்து அதைத்தேடினேன். கடைகளில் கிடைக்கவில்லை. நண்பரிடம் இரவலாகப் பெற்று வாசித்தேன். என்னை மிகவும் அதிர்ச்சி அடையச்செய்த நாவல் அது. இப்படி ஒரு உலகமா? இப்படி ஒரு வாழ்க்கையா ? என்று எண்ணினேன். மனிதர்கள் ஏன் இப்படி வாழ்கிறார்கள்? ஏன் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தபிறகும்கூட அவர்கள் மேலும் வாழவே ஆசைப்படுகிறார்கள்? என்ற எண்ணங்கள் எனக்குள்ளே எழுந்தன. ஆனால் பிறகு நாவலை முழுக்க வாசிக்கும்போது தெரிந்துகொண்டேன் . அவர்களின் வாழ்க்கையிலும் எத்தனை உல்லாசங்களும் வேடிக்கைகளும் எல்லாம் இருந்துகொண்டிருக்கின்றன என்று அறிந்தேன். அவர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். மனிதர்கள் ஏதோ கொஞ்சம் அன்பு கிடைத்தால்கூட சந்தோஷமாக இருப்பார்கள். அன்பு இல்லாத மாளிகையில் வாழ்வதைவிடவும் அன்புள்ள தெருவிலே பிச்சைக்காரனாக வாழலாம். எனக்கு அந்த நாவலிலேயே பிடித்த கதாபாத்திரம் என்றால் அது அகமதுதான். எத்தனை தன்னம்பிக்கையான மனுஷன் அவன். அவனைப்போல ஒருவன் எந்த இடத்திலும்  சுயமரியாதைக்கு குறைவு இல்லாமல் பிறர்மேல் பாசமும் கருணையும் கொண்டுதான் வாழ்வான். அகமது ”நான் தீனிலே விசுவாசம் உடைய முசல்மான்’ என்று சொல்லும் இடத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. ஒரு பிச்சைக்காரர் நான் பிச்சைக்காரர் என்று சொல்லாமல் வேறு எதைச்சொன்னாலும் அது உயர்ந்தவிஷயம் அல்லவா? நல்ல நாவல். மிகவும் மனம் ஒன்றி வாசித்தேன். குய்யனுக்கு அத்தனை பிச்சைக்காரர்களும் சாப்பாடு வாங்கிக்கொண்டு கொடுக்கும் இடம் காவியமாக இருந்தது
சண்முகம் எதிராஜ்

No comments:

Post a Comment